6 மாதங்களில் இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்
எதிர்வரும் 6 மாதங்களுக்குள் உலக பொருளாதாரம் வழமைக்கு திரும்பிய பின், இலங்கையின் பொருளாதாரமும் வழமைக்கு திரும்பிவிடும் என தான் எதிர்பார்ப்பதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana) தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு வீழ்ச்சியடைந்துள்ளமையால் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளமை ஏற்றுக் கொள்கின்றோம்.
அதற்காக எரிபொருள் விநியோகத்திற்கான ஏகாதிபத்திய உரிமத்தை இந்தியாவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. அதற்கான எந்தவொரு கலந்துரையாடல்களும் இடம்பெறவுமில்லை.
கொவிட் தொற்றின் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கமே இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது.
அத்தோடு இரண்டு வருடங்களுக்கு முன்னர் காணப்பட்டதை விட மசகு எண்ணெணெய்யின் விலை உலக சந்தையில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
அதனால் இறக்குமதிச் செலவும் இரு மடங்காக அதிகரித்துள்ளது. எவ்வாறிருப்பினும் நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படவில்லை.
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் எரிபொருள் இறக்குமதிகளுக்கு மாத்திரமே அரசாங்கம் முன்னுரிமையளிக்கும்.
ஆனாலும், நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் மக்களின் வாழ்வாதாரத்தை வழமையாகக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.