இலங்கையில் அதிகரிக்கும் பாலியல் தொழில்கள் மற்றும் தற்கொலைகள் - காரணம் இதுதான்!
இலங்கையில் நிலவுகின்ற மோசமான பொருளாதார நெருக்கடியானது பாலியல் தொழில்கள் மற்றும் தற்கொலைகளுக்கு வழியமைத்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
பல குடும்பங்கள் வாழ்க்கை செலவுகளை சமாளிப்பதில் பல நெருக்கடிகளை எதிர்கொள்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளுக்கு கூட போதியளவு உணவு வழங்க முடியாத நிலை தொடர்வதாகவும் குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகரிக்கும் பாலியல் தொழில்
வேலைவாய்ப்பு அற்ற நிலையில் இளைஞர், யுவதிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டை விட்டு வெளியேறும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க, பணத்தை சம்பாதிக்க பாலியல் தொழில்களும் அதிகரித்துள்ளதாக ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
வாழ்வாதாரத்திற்காக அதிகமான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும், 20 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களும் இந்தத் தொழிலில் ஈடுபடுவதாகவும் குறித்த ஆய்வினை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேசமயம், பல ஆண்கள் 'ஆண் பாதுகாப்பு' சேவைகளை வழங்கும் இணையத்தளங்களில் பதிவுகளை மேற்கொள்ளவதாகவும் சொல்லப்படுகின்றது.
ஆண்களை வாங்குவதற்காக இது போன்ற பல இணையதளங்கள் செயல்படுவதாக குறித்த ஆங்கில ஊடகத்தின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
