இலங்கையில் வரலாறு காணாத நெருக்கடி! ஐ.நா நிபுணர்கள் எச்சரிக்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நெருக்கடி இலங்கையின் அனைத்து மக்களுக்கான மனித உரிமைகளை அனுபவிப்பதில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சுயாதீன நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளா்.
இலங்கையில் வரலாறு காணாத நெருக்கடி
இலங்கையில் வரலாறு காணாத உயர் பணவீக்கம், அதிகரித்து வரும் பொருட்களின் விலைகள், மின் துண்டிப்பு , எரிபொருள் தட்டுப்பாடு நெருக்கடி மற்றும் பொருளாதார வீழ்ச்சி குறித்து ஐ.நாவின் சுயாதீன நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடன் நெருக்கடியானது, நாடுகள் மீது ஏற்படுத்தியிருக்கும் பாரதூரமான கட்டமைப்பு ரீதியான தாக்கங்களை நாம் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கின்றோம் என வெளிநாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சுயாதீன நிபுணர் அத்திய வாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய நிதி அமைப்பில் ஆழமான கட்டமைப்பு இடைவெளிகள் மற்றும் மனித உரிமைகளை செயற்படுத்துவதையும் கடன் நெருக்கடி பாதிக்கின்றது என அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்கள் உட்பட பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கான எந்தவொரு பதில் நடவடிக்கையும் மனித உரிமைகளை மையப்படுத்தியதாகவே இருக்க வேண்டும் எனவும் அத்திய வாரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் தொடர்பான அறிக்கையிலும் அதிகரித்து வரும் நிறுவனக் கடன்கள் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதாக ஐநா நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடனைத் திருப்பிச் செலுத்துவதே நாட்டின் மிகப்பெரிய செலவீனம்
கடனைத் திருப்பிச் செலுத்துவதே நாட்டின் மிகப்பெரிய செலவீனமாக இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் கடனை செலுத்துவதற்கான மாற்று வழிகள் மற்றும் குறைவான தீங்கு விளைவிக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தியதாக ஐ.நா நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி குறித்து மனிதாபிமான அமைப்புக்கள் மாத்திரமல்லாமல், சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குநர்கள் மற்றும் உதவி வழங்கும் ஏனைய நாடுகளின் உடனடி உலகளாவிய கவனம் தேவை" என்று ஐநா நிபுணர்கள் தெரிவித்தனர்.
