இடைக்கால உத்தரவிற்கு எதிராக பொங்கி எழுந்த கல்வி அமைச்சர்
ஆறுமாத இடைக்கால உத்தரவின் காரணமாக பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க முடியவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று (24) நாடாளுமன்றத்தில் ரோகினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அதேவேளை, ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மாகாண சபைகளுக்கு இணைத்துக் கொள்வதற்கான அதிகாரம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "இடைக்கால உத்தரவுகளுக்கு கால அவகாசம் இருக்க வேண்டும். அதற்கு சிவில் நடைமுறை சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.
மாணவர்களுக்கு அநீதி

நாட்டில் ஆறு மாதங்களுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிபர்களை நியமிக்க முடியாதுள்ளது. இதுபோன்ற விடயங்களால் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
இவற்றை பதிவிடும் மனுதாரர்களுக்கு இது புரியவில்லையா. இது நில வழக்கு அல்ல. இடைக்காலத் தடை அப்படி ஒன்றும் இல்லை. இடைக்கால தடை உத்தரவு நிரந்தர உத்தரவாக இருக்க முடியாது."என்றார்
மேலும், 32,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதெனவும் தொடக்கப் பிரிவில் பயிற்சி பெறாத ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டதால், அந்தத் துறை சீரழிந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.