ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இலங்கை தெரிவு
ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு (ECOSOC) இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (7) நியூயோர்க்கில் (New York) நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் (United Nations General Assembly) இத்தெரிவு இடம்பெற்றுள்ளது.
189 உறுப்பு நாடுகளில் 182 வாக்குகளைப் பெற்று, 2025 ஜனவரி 1 முதல் மூன்று வருட காலத்துக்கு இலங்கை ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய நோக்கங்கள்
பிராந்தியத்திலிருந்து 2வது அதிகூடிய வாக்கு எண்ணிக்கையையும், ஒட்டுமொத்தமாக 7வது அதிக வாக்கு எண்ணிக்கையையும் இலங்கை பெற்றுள்ளது
இதற்கு முன்னர் 1985 - 1989 மற்றும் 2006 - 2008 வரையான காலப்பகுதியில் இந்த சபைக்கு இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.
இந்த சபையின் மூலம் வறுமையை ஒழித்தல், உணவுப் பாதுகாப்பு, அபிவிருத்திக்கான நிதியுதவி, பாதிக்கப்படக்கூடிய நாடுகளுக்கு சிறந்த ஆதரவளிக்கும் சர்வதேச நிதிக் கட்டமைப்பின் சீர்திருத்தம், காலநிலை நீதி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கான முயற்சிகள், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பிளவைக் குறைத்தல் போன்றன முக்கிய நோக்கங்களாக கொள்ளப்பட்டுள்ளன.
ஆசிய பசிபிக் பிராந்தியம்
தேர்ந்தெடுக்கப்பட்ட 18 நாடுகளில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இருந்து உஸ்பெகிஸ்தான் (Uzbekistan), இலங்கை (Sri Lanka), பங்களாதேஷ் (Bangladesh) மற்றும் சவுதி அரேபியா (Saudi Arabia) ஆகியவை அடங்குகின்றன.
இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சு மற்றும் அதன் வெளிநாட்டு இராஜதந்திர தூதரகங்கள் தலைமையிலான இலங்கையின் இராஜதந்திர ஈடுபாட்டிற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |