மொட்டு கட்சியின் பிரதமர் வேட்பாளர்! வெளியானது தகவல்
இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறங்குவார் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த தேர்தலை இலக்காகக் கொண்டு பசில் ராஜபக்ச அடுத்த வாரம் அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு திரும்பவுள்ளதாக ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினரான வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தல்
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தனது சகோதரர்களான மகிந்த மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் தயாராக இல்லை என அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு மொட்டு கட்சி ஆதரவளிக்காது என உதயங்க வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுமென தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பசிலின் வருகை
எதிர்வரும் 5 ஆம் திகதி பசில் ராஜபக்ச இலங்கைக்கு திரும்பும் போது, அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்படும் என உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், வாகன அணிவகுப்புடன் பசில் ராஜபக்ச விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு அழைத்து வரப்படுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |