தேர்தல் இல்லையேல் நாடு இரத்த வெள்ளத்தில் மூழ்கும் - விடுக்கப்பட்டது கடுமையான எச்சரிக்கை!
இலங்கையில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாடு இரத்தத்தில் மூழ்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் அவரது அரசாங்கமும் தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்தாலும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கமைய தேர்தல் நடத்தப்படும் என கண்டியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவிருக்கும் தேர்தல் குறித்து பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மாற்ற முயற்சிக்கும் ரணில் மற்றும் தினேஸ்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலங்கையில் அறிமுகப்படுத்திய தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தற்போது அதனை மாற்ற முயற்சிக்கிறார்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு 2 ஆயிரம் ஆக இருந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4 ஆயிரம் ஆக தினேஷ் குணவர்தன அதிகரித்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டம்
மேலும் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு சிறிலங்கா அரசாங்கத்தில் உள்ள பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான முயற்சியில் ஈடுபட்ட சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தற்போது மாற்று கதைகளை கூறி தேர்தலை ஒத்திவைக்க திட்டமிடுகிறார் எனவும் அதனை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
