கடன் மறுசீரமைப்பு - சீனாவுடனான பேச்சு இறுதிக் கட்டத்தில்..
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் கடனைப் பெறும் திட்டத்திற்கு உதவும் வகையில், தமது கடன்களின் மறுசீரமைப்புக்கு சீனா உடன்படும் என்று நம்புவதாக திறைசேரியின் பிரதிச் செயலாளர் பிரியந்த ரத்நாயக்க செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், அடுத்த சில நாட்களில் அவர்களின் உறுதிமொழியை தாம் எதிர்பார்ப்பதாகவும் பிரியந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
எனினும் கலந்துரையாடல்களின் இரகசியத்தன்மை காரணமாக, கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளின் விபரங்களை வழங்குவது கடினமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை, கடந்த ஆண்டில் வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை காரணமாக, பணவீக்கம் முதல் செங்குத்தான மந்தநிலை வரையிலான சவால்களைச் சந்தித்து வருகிறது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெற இலங்கை பந்தயத்தில் ஈடுபட்டுள்ளது.
இறுதி உடன்பாடு
இந்தப் பந்தயத்தில் வெற்றி பெறுவதற்கு முன்னர், இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கு அதன் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனர்களான சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் ஆதரவை இலங்கை எதிர்பார்த்திருந்தது.
இந்த நிலையில், இந்தியா, தமது ஆதரவை தற்போது வெளியிட்டுள்ள நிலையில் சீனாவும் உடன்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
