உலகநாடுகளில் முன்னணியில் திகழும் இலங்கை
தடுப்பூசி திட்டத்தில் இலங்கை முன்னணியில் இருப்பதாகவும், நாட்டில் 75% க்கும் அதிகமான மக்களுக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சில நாடுகள் மாத்திரமே அதிக சதவீத தடுப்பூசிகளை செலுத்தியுள்ளதாவும் அந்த வரையறுக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தற்போது மூன்றாவது ஊசி மருந்தின் 2 மில்லியன் டோஸ்கள் இருப்பதாகவும், எதிர்காலத்தில் மேலும் 15 மில்லியன் டோஸ்கள் ஓடர் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகக் கூறிய அவர், நோயைக் கட்டுப்படுத்துவது மக்களின் பொறுப்பு என்றும் கூறினார்.
பாடசாலைகள் மீள திறக்கப்பட்டதன் பின்னர், தேவைக்கேற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதற்கேற்ப, தேவைப்பட்டால் மாணவர்களை ஒரு நாள் அல்லது குழுக்களாக அழைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.