சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கோப்புகள் மாயம்: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணைகள்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து பல முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ளதாக, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால மருதானை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் நேற்று(5) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மருதானை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன கோப்புகளில் கட்சியின் நிர்வாக விவகாரங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, பல கோப்புகள் உள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு
அத்துடன், கட்சியின் சில முக்கிய கோப்புகள் காணாமல் போயுள்ள நிலையில், விசாரணைகளுக்காக கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகள் முடியும் வரை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், சம்பவத்துடன் தொடர்பில்லாத சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் கேட்போர் கூடத்துக்குள் நுழையவும் காவல்துறையினர் தடை விதித்துள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன செயல்படுவதை இடைநிறுத்தும் தடையுத்தரவை நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |