சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று முதல் மறுசீரமைப்பு : மீள இணையவும் வாய்ப்பு
கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
இதன்மூலம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அதன் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலில் வெற்றி உறுதி
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வெற்றியை நிலைநாட்டக் கூடிய வேட்பாளர்களை முன்நிறுத்துவது மாத்திரமன்றி தேர்தலை வெற்றிகரமாக சந்திக்க கட்சி தயாராக உள்ளது.
அதன்படி, இன்று தொடக்கம் எதிர்வரும் வாரங்களில் கட்சித் தலைவர்கள், மூத்த உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மீள இணைய வாய்ப்பு
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்ட வாக்குகள் அனைத்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளே.
எங்களுடன் இணைந்து புதிய மாற்றம் ஒன்றை எதிர்ப்பார்த்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகள் வழங்கப்பட்டன. எனினும், தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை தற்போது மக்கள் உணர்கின்றனர். ஏமாற்றப்பட்டு விட்டதை அறிகின்றனர்.
ஆகவே, கடந்த தேர்தல்களில் எங்கள் கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்கள், ஒதுங்கி நின்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எங்களுடன் மீள இணைய வாய்ப்புகள் உள்ளன என துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
