மீண்டும் உயரும் எரிபொருள் விலை!
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக ஜூன் மாத நடுப்பகுதியில் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்று ஐக்கிய தொழிற்சங்க ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
இதன்படி மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின், எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததையடுத்து, கடந்த மே மாதம் 24 ஆம் திகதி முதல் தடவையாக விலையில் திருத்தம் செய்யப்பட்டது.
குறைக்கப்பட்ட விநியோகம்
27ஆயிரம் மெற்றிக்தொன் 92 ஒக்டேன் பெற்றோல் மற்றும் 12 ஆயிரம் மெற்றிக்தொன் ஒக்டேன் 95 என்பன போதுமான அளவு கையில் இருக்கின்ற போதிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை குறைத்துள்ளது.
டீசலை பொறுத்தவரையில், தற்போதுள்ள அதன் இருப்பு ஐந்து நாட்களுக்கு போதுமானதாக இருக்கும். இந்தநிலையில் இந்தியாவிலிருந்து டீசல் இறக்குமதி செய்யப்படும் வரை, மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகமே மேற்கொள்ளப்படும் என்று பாலித குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே 24ஆம் திகதி மின்சக்தி அமைச்சர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் இரண்டு வாரங்களில் எரிபொருள் விலையேற்றம் இருக்கும் என அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மங்களவின் எரிபொருள் சூத்திரம்
தற்போதைய எரிபொருள் விலை சூத்திரம் மறைந்த நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தியதைப் போன்றது, ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஆனால் தற்போதைய சூத்திரத்தின்படி எரிபொருள் விலை உலக சந்தை விலைக்கு ஏற்ப நடைமுறைக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
