எரிபொருள் நிலையத்தில் பொது மகனை எட்டி உதைத்த இராணுவ அதிகாரி தொடர்பில் தற்போது வெளியாகியுள்ள தகவல்!
எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பொது மகன் ஒருவரை இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தவுள்ளதாக இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது இராணுவ அதிகாரி நடத்து கொண்ட விதம் சம்பந்தமாக நிறுவன மட்டத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தில் இராணுவ அதிகாரிகளை கெட்ட வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாகவும் பிரிகேடியர் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
குருணாகல் யக்கஹபிட்டிய பிரதேசத்தில் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பதற்றத்தின் போது சீருடையில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவர், அங்கிருந்த நபரின் வயிற்றில் காலால் உதைப்பது தொடர்பான காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மோதல் சம்பவம் ஒன்று நடக்கும் போது அங்கு வந்த லெப்டினட் கேர்ணல் தர அதிகாரி ஒருவரே காலால் உதைக்கின்றார். அந்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு முன்னால் இந்த சம்பவம் நடந்துள்ளது.
எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு கடந்த சில தினங்களாக வெளியிடங்களில் இருந்து வரும் நபர்கள், எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இருப்பவர்களுடன் சண்டையிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் அங்கு கடமையில் இருந்த இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் கெட்டவார்த்தைகளால் திட்டி மோதலை ஏற்படுத்தியுள்ளனர். அப்போது அங்கு வந்த இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
