காலி போராட்டத்தை வன்முறைக் களமாக மாற்றியவர்கள் இவர்களே - உண்மையை வெளிப்படுத்திய தேரர்!
காலிமுகத்திடலை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பௌத்த சமயத்திற்கு சந்தர்ப்பம் கொடுக்கப்படவில்லை எனவும் கத்தோலிக்க சமயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது எனவும் பலாங்கொட கஸ்சப்ப தேரர் தெரிவித்துள்ளார்.
இணையத்தள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“காலிமுகத்திடல் போராட்டத்தில் இணைந்துகொண்ட முதல் பௌத்த பிக்கு நான், போராட்டக்களத்தில் கத்தோலிக்க குருமாருக்கு ஒரு விதமாகவும் பௌத்த பிக்குகளுக்கு வேறு விதமாகவும் உபசரித்தனர்.
மக்கள் போராட்டத்தை அழித்த கட்சிகள்
கத்தோலிக்க திருச்சபை போராட்டத்திற்கு நிதியுதவி வழங்கியது. மக்கள் விடுதலை முன்னணியும் முன்னிலை சோசலிசக்கட்சியும் போராட்டத்திற்குள் நுழைந்து அதனை அழித்து விட்டன.
அமைதியான போராட்டத்தை இந்த கட்சிகளே வன்முறையை நோக்கி கொண்டு சென்றன. போராட்ட களத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் என்று கூறிக்கொண்டவர்கள் இருந்தனர்.
ரணில் விக்ரமசிங்கவின் குழு, அவர் பிரதமராக தெரிவானதும் போராட்ட களத்தில் இருந்து வெளியேறியது. அதன் பின்னர் போராட்ட களத்திற்கு உணவு, பானங்கள் கிடைக்காத நிலைமை ஏற்பட்டது.
போராட்டத்திற்கு அழைத்தாலும் மக்கள் வீதியில் இறங்கமாட்டார்கள்
இவ்வாறு திட்டமிட்டு செயற்பட்டவர்களும் போராட்ட களத்தில் இருந்தனர். குமார் குணரட்னம் திட்டமிட்டு, தமது கட்சியின் குழுவினரை போராட்ட களத்திற்கு அனுப்பி இருந்தார். அனுரகுமார திஸாநாயக்கவும் தமது குழுவினரை அங்கு அனுப்பி இருந்தார்.
இவர்களில் குமார் குணரட்னம் குழுவினருக்கே அதிகமான பலம் இருந்தது. மக்களுக்கு தற்போது போராட்டம் வெறுப்பாகியுள்ளது. எந்த கட்சி அழைத்தாலும் தற்போது எவரும் வீதியில் இறங்க மாட்டார்கள்.
போராட்ட களத்தில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் போதைப் பொருட்கள், கஞ்சா செடி என்பன வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டவை.
போராட்டத்தை மலினப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை” எனவும் பலாங்கொட கஸ்சப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

