அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்களை குறிவைக்கும் சிறிலங்கா அரசாங்கம் - அடுத்தடுத்து வெளியானது அமைப்புக்களின் முடிவு!
இலங்கையில் அரச எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் குறிவைக்கப்பட்டு வரும் நிலையில் காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் இருந்து விலகிக்கொள்வதாக இரண்டு அமைப்புகள் அடுத்தடுத்து அறிவித்துள்ளன.
முதலில் கறுத்த தொப்பி அணி என்ற அமைப்பு இந்த போராட்டக்களத்தில் இருந்து விலகிய நிலையில் தற்போது தாராளவாதத்தை பின்தொடர்வதான அர்த்தப்படுத்தலுக்குரிய லிபரல் ஃபெலோஷிப் என்ற அமைப்பும் இவ்வாறான முடிவை அறிவித்துள்ளது.
காலிமுகத்திடல் போராட்டம் உட்பட ஏனைய போராட்டங்களில் இருந்து லிபரல் சகோதரத்துவம் என்ற அமைப்பு விலக முடிவு செய்துள்ளது.
தற்போதைய காலிமுகத்திடல் போராட்டத்தை குழுக்கள் மற்றும் சில நபர்கள் தமது அரசியல் கொள்கைகளை பரப்புரை செய்ய பயன்படுத்துவதால், போராட்டத்தின் பொது நோக்கம் சிதைந்து போயுள்ளது.
இந்த விடயம் உட்பட சில விடயங்களை ஆராய்ந்த பின்னர் போராட்டத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக லிபரல் சகோதரத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் போராட்டகாரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறையை எதிர்க்கும் அதேவேளை அரசியல் பழிவாங்கலுக்காக தமது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் சட்ட வரையறைக்குள் செயற்படுமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் லிபரல் சகோதரத்துவ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
அத்துடன் கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலுடன் இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கம் நிறைவேறியுள்ளதாக தமது அமைப்பு நம்புவதாகவும் லிபரல் ஃபெலோஷிப் குறிப்பிட்டுள்ளது.
போராட்டத்திலிருந்த விலகிய கறுப்பு தொப்பி அமைப்பு
இந்த நிலையில் இதுபோன்ற ஒரு காரணத்தை தெரிவித்துள்ள கறுப்புத் தொப்பி இயக்கம், காலி முகத்திடல் போராட்டத்துக்கான தனது பங்களிப்பிலிருந்து இன்றுடன் விலக்கிக்கொண்டுள்ளது.
கோட்டாபாயவின் பதவி விலகலை தொடர்ந்து, காலிமுகத்திடலில் போராடுவதில் எந்தக் காரணமும் இல்லை எனவும் கறுத்த தொப்பி இயக்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் எதிர்வரும் ஓகஸ்ட் 9 ஆம் திகதியும் புதிய அரச எதிர்ப்பு போராட்டங்களை நடத்தும் முனைப்புகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில் அதனை நசுக்கும் முயற்சிகளும் தீவிரமடைகின்றன.
இதன் பின்னணியிலேயே முக்கியமான போராட்ட செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து அதிரடியாக கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இன்றும் கொழும்பில் உள்ள முன்னிலை சோஷலிச கட்சியின் பணியகத்தில் காவல்துறை சோதனைகள் இடம்பெற்றுள்ளன.
செயற்பாட்டாளர்களின் கைத்தொலைபேசிகள் அனைத்தும் தற்போது சிறிலங்கா இராணுவ புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்குள் கொண்டு செல்லப்பட்டு அவர்களின் தொடர்பாடல்கள் கடுமையாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையிலேயே கறுத்த தொப்பி அணியும் லிபரல் ஃபெலோஷிப் அமைப்பும் இந்த போராட்டங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
