எரிவாயு முகவரான ராஜாங்க அமைச்சரை தாக்க முயற்சித்த மக்கள்
சிறிலங்கா இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திற்கு கேகாலை பிரதேசத்தில் மக்களின் கடும் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிட்டதாக தெரியவருகிறது.
கேகாலை ரண்வல அளுத்பார சந்தி பகுதியில் உள்ள சமையல் எரிவாயு விநியோகிக்கும் நிலையத்திற்கு எதிரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், கேகாலை மாவட்டத்தின் லிட்ரோ எரிவாயு விநியோக முகவர் நிறுவனத்தின் உரிமையாளர் என்பதுடன் இந்த விநியோக நிறுவனத்தையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் கேகாலை மாவட்டம் முழுவதும் அவருக்கு சமையல் எரிவாயு விநியோக நிலையங்கள் இருக்கின்றன.
சம்பவம் நடைபெற்ற நேரத்தில் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அந்த இடத்திற்கு வாகனத்தில் வந்துள்ளதுடன் வாகனத்தின் வேகத்தை குறைத்துள்ளார். அங்கு மக்கள் வரிசையில் நிற்பதை பார்த்த அவர், வாகனத்தை நிறுத்தாது சென்றுள்ளார்.
அப்போது அந்த வாகனத்தில் இருப்பது இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் என அறிந்துகொண்ட வரிசையில் நின்ற மக்கள், ஆத்திரமடைந்து அவருக்கு தமது எதிர்ப்பை காட்டியுள்ளதுடன் எரிவாயு கொள்கலன்களை கொண்டு தாக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் மக்கள் அந்த இடத்தில் வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
அந்த நேரத்தில் கேகாலை ரண்வல சந்தியை தாண்டி செல்வதற்காக வாகனத்தில் வந்த பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய காந்த குணதிலக்க உடனடியாக பயண வழியை மாற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
