சர்வதேசத்திடம் பிச்சை எடுக்கும் நிலையில் கோட்டாபய - மகிந்த அரசாங்கம்!
கோட்டா - மஹிந்த தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம், சர்வதேசத்திடம் பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்றுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போது, தாயக மக்கள் அனுபவித்த துன்பநிலை தற்போது ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டு விடுமோ எனும் அச்சம் தனக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,
இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மிக மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், ஆளுந்தரப்பு அமைச்சர்களே இந்த பொருளாதார வீழ்ச்சி குறித்து கருத்துக்களை வெளியிட ஆரம்பித்திருப்பதாகவும் அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். ராஜபக்ஸ அரசாங்கமானது தற்போது, தோல்வியுற்ற மற்றும் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாத அரசாங்கமாக மாறியிருப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் - மைத்திரி தலைமையிலான ஆட்சியின் போது, “ நாட்டை ஆட்சி செய்ய முடியாவிட்டால் தங்களிடம் ஒப்படையுங்கள், நாங்கள் நாட்டை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவோம் ’ என சவால் விட்டவர்கள் இன்று நாட்டை சோமாலியாவை விட மோசமான நிலைக்கு தள்ளியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.