இலங்கையை இராணுவ மயமாக்கும் கோட்டாபய? கேள்விக்குறியாகும் ஜனநாயகம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கடந்தகால செயற்பாடுகள் அனைத்தும் நாட்டை இராணுவ மயமாக்குவதற்கான அறிகுறிகளையே காட்டி நிற்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி உருவாக்கியுள்ள மனித உரிமைகள் குறித்து ஆராய்வதற்கான ஒரு குழு ஜனநாயகமாக செயற்பட்டு இந்த விடயங்களில் செயற்படுமா என்பது சந்தேகத்திற்குரிய விடயமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் ஐபிசி தமிழ் வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடரில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கில் இயங்கும் சிவில் அமைப்புகள், மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவை மற்றும் அதில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு அறிக்கையொன்றினை சமர்ப்பித்திருந்தனர்.
இந்த விடயமானது, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்டா - மஹிந்த தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சர்வதேச சதித்திட்டம் எனப் போர்க்காலத்தில் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றிய ரோஹித்த போகொல்லாகம தெரிவித்திருந்தார் என்றார்.