ஆயுதப் படைகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடியலைந்த தாயார் காலமானார்!
சிறிலங்கா அரச படைகள் மற்றும் அதன் துணை ஆயுதக்குழுக்களின் கூட்டு முயற்சியால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை 15 வருடங்களாக தேடியலைந்த, தாய் ஒருவர் காலமாகியுள்ளார்.
உண்மையைக் கண்டறிந்து நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வேண்டி நின்ற தாயான இவர் உண்மை புலப்படாமலேயே நோய் காரணமாக காலமாகியுள்ளார்.
இவ்வாறு நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தவர் வவுனியாவைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் 2100 நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடிக்கண்டறியும் தமிழர் தாயக சங்கத்தின் உறுப்பினராக தீவிர பங்களிப்பு வழங்கி வந்த வவுனியா கல்மடு பூம்புகாரைச் சேர்ந்த இ.வள்ளியம்மா வயது 78 என்பவரே புத்திர சோகம் காரணமாக நோய்க்கு ஆளாகியிருந்த நிலையில் நேற்றைய தினம் காலமாகியு்ளளார்.
கடத்தப்பட்ட மகன்
இவரது மகன் 1991.02.02 பிறந்த இராமச்சந்திரன் செந்தூரன் என்பவர் வவுனியா நகருக்கு வழமை போன்று தினக்கூலி வேலைக்கு சென்ற வேளை 2007.05.17 அன்று கடத்தப்பட்டதாகவும், அவ்வாறு கடத்தப்படும் போது அவருக்கு வயது 16 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடத்தப்பட்ட தனது மகனை மீட்டுத் தரக்கோரி பல வருடங்களாக போராடிய தாய் இறுதி வரை மகனைக் காணமுடியாது நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார்.
இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு, தாயாருக்கு தமிழர் தாயக சங்கத்தினர் தமது இறுதி வணக்க அஞ்சலிகளையும் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

