கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கம் தொடர்பில் வெளியான மற்றுமொரு ஆய்வு!
இலங்கையில் அதிகாரத்திலுள்ள கோட்டாபய - மஹிந்த தலைமையிலான அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி வலுவடைந்து வருவதை மற்றுமொரு ஆய்வு முடிவு உறுதி செய்துள்ள நிலையில், ராஜபக்ஸ அதிகாரத்திற்கு நெருக்கடிகள் வலுவடைந்துள்ளன.
இலங்கையில் சராசரியாக நான்கு பேரில் ஒருவர், சந்தர்ப்பம் கிடைக்குமாயின் நாட்டை விட்டு வெளியேற விரும்புவதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர், வெளிநாடு செல்லும் நோக்குடன் கடவுச் சீட்டை பெற்றுக்கொள்ள காத்திருப்பது தொடர்பில் ஐபிசி தமிழ் கள ஆய்வினை மேற்கொண்டு செய்தி வெளியிட்ட நிலையில் இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் படித்த இளைஞர்கள் மத்தியில் நாட்டை விட்டு வெளியேறும் விருப்பம் 50 வீதத்தால் உயர்வடைந்துள்ளதாக சுகாதார கொள்கைகள் தொடர்பான நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வறிக்கைக்கு அமைய, ஆய்வில் பங்குபற்றிய 34 வீதமான ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முழுமையான விருப்பத்தைக் கொண்டுள்ளதுடன், அவர்களில் 24 வீதமானோர் ஏற்கனவே அதற்காக திட்டமிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
மேலும் 20 வீதமானோர் இன்னும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. மேலும் நாட்டில் 22 வீதமான பெண்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகின்றனர்.
மேலும் அவர்களில் 22 வீதமானவர்கள் இதற்காகத் திட்டமிடுவதுடன், மேலும் 12 வீதமானவர்கள் அதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. கடந்த 3 - 5 வருடங்களில் இலங்கையர்கள் மத்தியில் வெளிநாடு செல்வதற்கான அபிலாஷைகள் இரட்டிப்பாகியுள்ளதாக அந்தக் ஆய்வில் தெரியவந்துள்ளது.
உயர்கல்வித் தகுதி பெற்ற பலர் தற்போதைய ஆட்சியில் விரக்தியடைந்து, நாட்டை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் அதிகமாகியுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பின்படி, சராசரியாக உயர்தரம் அல்லது அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி பெற்றவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு 2.6 வீதாமாக ஆக உள்ளதுடன், நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பவர்களின் தொகை 10.2 வீதத்தால் உயர்வடைந்துள்ளது.
அண்மைக்காலமாக இலங்கைத் தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்திற்கு வாக்களித்த இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள வரிசையில் நிற்பதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்த கருத்தை இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் உறுதிப்படுத்துவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வெளிநாடு செல்வதில் இளைஞர்களே அதிக ஆர்வம் காட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்து சரியானது எனக் கணக்கெடுப்பு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. இவ்வாறு நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு பொருளாதாரத்தின் மீதான அவநம்பிக்கையான பார்வை, கொவிட்-19 ஒழிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை மீதுள்ள அதிருப்தி, விரக்தி என்பவற்றை முக்கிய ஆதாரங்களாக ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர், ஒரு வருடத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமடையும் என எதிர்பார்ப்பதாக ஆய்வில் மேலும் சுட்டிக்காட்டுகிறது.