கூட்டுப் பொறுப்பை மதிக்காது நடந்து கொண்ட விமல் மற்றும் கம்மன்பில ஆகியோர் செய்த தவறுகள் மன்னிக்க முடியாதவை!
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகிய இரண்டு பேர் முக்கியமான அமைச்சு பதவிகளை பயன்படுத்தி நெருக்கடிகளை உருவாக்கியது, நாட்டின் அப்பாவி மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மிக மோசமான குற்றம் என பொதுஜன பெரமுனவின் ஆலோசகரும் இலங்கை பத்திரிகை சபையின் தலைவருமான கலாநிதி மகிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
அவர்கள் செய்த சூழ்ச்சிகள் என்றுமே மன்னிக்க முடியாதவை எனவும் வீரவன்சவும் கம்மன்பிலவும் அமைச்சு பதவிகளை பயன்படுத்தி உருவாக்கிய நெருக்கடிகள் அரசியல் தவறுகள் அல்ல. அப்பாவி மக்களுக்கு செய்த மோசமான குற்றம்.
இந்த நெருக்கடிகள் காரணமாக எரிபொருளுக்காக வரிசைகளில் நிற்கும் பொதுமக்களின் அப்பாவி தனமான முகங்களை பார்க்கும் போது, எமக்கு ஏற்படும் குற்ற உணர்வு வெளிப்படுத்த முடியாதது.
இந்த நிலைமையை உருவாக்க விமல், கம்மன்பில ஆகியோர் செய்த சூழ்ச்சிகளுக்கு எப்போதும் மன்னிப்பு வழங்க முடியாது. தமது எதிர்கால அரசியல் அதிகார நிகழ்ச்சி நிரலுக்காக அவர்கள் இதனை செய்தனர்.
இவர்கள் இருவரும் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் பயணத்திற்கு தடையேற்படுத்தினர். அவர்கள் தமது தவறை திருத்திக்கொள்வார்கள் என்று எண்ணி அரச தலைவர் பொறுமையாக இருந்தார்.
தொற்று நோய் அதற்கு பின்னர் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் ஒன்றாக செயற்பட வேண்டிய அமைச்சரவைக்குள் இருந்த இவர்கள், கூட்டுப் பொறுப்பை மதிக்காது நடந்து கொண்டனர். இவர்கள் அரச தலைவரின் பொறுமையை அடிக்கடி பரிசோதித்தனர்.
அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை உருவாக்கினர். நாடு தற்போது அடைந்துள்ள நிலைமைக்கு வழியை ஏற்படுத்தி முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கும் அளவுக்கு இவர்கள் சென்றனர்.
வீரவன்ச மற்றும் கம்மன்பில ஆகியோருக்கு நாட்டின் மிக முக்கியமான அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டிருந்தன. கைத்தொழில் அமைச்சின் கீழ் பல நிறுவனங்கள் இருக்கின்றன. எரிசக்தி அமைச்சு இதே போன்று பலமான அமைச்சு.
எனினும் இவர்கள் இருவரும் தமது பொறுப்பை ஒதுக்கி வைத்து விட்டு, எதிர்க்கட்சியை போல் நடந்துக்கொண்டனர். அமைச்சரவையில் அங்கம் வகித்துக்கொண்டு அனைத்து சிறப்புரிமைகளையும் அனுபவித்துக்கொண்டு, அரசாங்கத்துடன் தொடர்பில்லாத உணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இருவரும் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தின் வெற்றியை பங்கு போட்டுக்கொண்ட இவர்கள், சவால்கள் ஏற்படும் போது அதனை ஒரு தரப்பினர் மீது சுமத்தினர். பொறுமைக்கும் எல்லை உண்டு. விமலும் கம்மன்பிலும் பொறுமையின் எல்லையை மீறினர்.
கத்தி தங்கத்தில் இருந்தாலும் அதில் குத்திக்கொள்வது மரணத்தை ஏற்படுத்தும் எனவும் மகிந்த பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
