யுத்தகளமாக மாறியுள்ள இலங்கை
இலங்கை பல நாடுகளின் யுத்தகளமாக மாறியுள்ளதாக சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர(Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
கொழும்பின் புறநகரான கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்காவுக்கு வழங்க ஸ்ரீலங்கா அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக ஆளுங்கட்சிக்குள் உருவெடுத்துள்ள நெருக்கடி உக்கிரநிலையை அடைந்துள்ளது.
இந்த நிலையில் அமைச்சர்களான, வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara), உதய கம்மன்பில(Udaya gamanpila), விமல் வீரவன்ச(Wimal Weerawansa) உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சிகள் ஓரணியில் திரண்டு இன்றைய தினம் ‘மக்களின் பேரவை’ என்ற பெயரில் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தன.
இந்த மாநாட்டில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
வேறு அரசாங்கத்தை உருவாக்குவதோ, ஆட்சியை கவிழ்ப்பதோ எம்முடைய நோக்கமல்ல, அது தவறான சிந்தனை. அரசாங்கம் முன்னெடுக்கும் சில தவறான செயற்பாடுகளை தடுப்பதே எமது நோக்கம். இந்த நாட்டின் மிக முக்கிய பொருளாதார மத்தியஸ்தானங்கள் நாட்டிற்கு சொந்தமானதாக இருக்க வேண்டும். அதுவே எமது நோக்கம் என அவர் தெரிவித்தார்.