கடும் நெருக்கடியில் சிறிலங்கா!! எதிரணி எம்.பி சுட்டிக்காட்டு
நாட்டின் பொருளாதார நெருக்கடிப் பிரச்சினையானது எந்த நேரத்தில் வெடித்துச் சிதறும் என்பதைக் கூற முடியாது என்கிறார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் (Imthiaz Bakeer Markar).
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாக்கீர் மாக்கார் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டின் தற்போதைய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு கோபமும், எதிர்ப்பும், வெறுப்பும் தான் இருக்கிறது. இந்த நேரத்தில் எந்த தேர்தலை நடத்தினாலும் ஐக்கிய மக்கள் சக்திக்கே வெற்றி என்பது தெளிவானது.
நாட்டு மக்கள் மக்கள் தற்போது பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த அரசாங்கம் செல்வந்தர்களுக்கு நிவாரணத்தை வழங்கும், இல்லாமல் போன வரி வருமானத்தை ஈடு செய்ய பணத்தை அச்சிடும்.
“இந்தப் பொருளாதார வெடிகுண்டு எப்போது வெடிக்கும் எனத் தெரியாது” என ஜப்பானில் அதிகளவில் விற்பனையாகும் மூன்று மில்லியன் பேர் படிக்கும் நிக்கீ ஏசியா என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.
எமது நாடு மோசமான நிலைமைக்கு வந்துள்ளது. தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டு பாருங்கள். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு ஆகிய அனைத்து நாடுளும் அந்நிய செலாவணி கையிருப்பை சிறப்பாக முகாமைத்துவம் செய்துள்ளன. எமது நாடு தற்போது லெபனானை அண்மித்துள்ளது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிப் பிரச்சினையானது எந்த நேரத்தில் வெடித்துச் சிதறும் என்பதைக் கூற முடியாது. போர் நடந்தது ஆனால் இப்படியான நிலைமை ஏற்படவில்லை. பொருளாதார பிரச்சினை, போஷாக்கின்மை, கல்விப் பிரச்சினை, விவசாயப் பிரச்சினை, தீப்பிடித்த கப்பலால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பிரச்சினை என பிரச்சினைகள் அதிகரித்துள்ளன.
10 ஆண்டுகளில் பசளை பாவனையில் மாற்றம் செய்யப்படும் என சௌபாக்கிய நோக்கில் கூறியுள்ளனர். ஆனால், அதனை 24 மணி நேரத்தில் செய்துள்ளனர். இந்தப் பிரச்சினை காரணமாக நெல், பெருந்தோட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயம் மற்றும் பெருந்தோட்டங்கள் மூலம் கிடைக்கும் அறுவடை குறைந்துள்ளது.
வெளிநாட்டு வருவாய் குறைந்துள்ளது. இப்படிச் சென்றால், அனைத்தும் அனைத்தும் வீழ்ச்சியடைந்து, இல்லாமல் போய்விடும்” என்றார்.