இலங்கையும் தப்பிக்க வாய்ப்பில்லை- பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
கொவிட் 19 வைரஸின் டெல்டா வகை எதிர்காலத்தில் காற்றின் ஊடாக பரவக்கூடிய சாத்தியம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அனுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் பல்வேறு வகையான வைரஸ் தொற்றுக்கள் பரவு வருகின்ற நிலையில் இலங்கையில் டெல்டா வைரஸ் பரவும் அபாயம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளதாகவும் நமது நாட்டிலும் அதிலிருந்து தப்பிக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையில் மரபணு மாற்றமடைந்த டெல்டா வைரஸ் தொற்றானது நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக மாறும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
குறித்த வைரஸ் தொற்றுப் பரவலின் பாரதூரத்தன்மையை அரசாங்கமும் பொதுமக்களும் புரிந்துகொள்ளாவிடின் ஆபத்தான நிலையை நாடு எதிர்கொள்ள நேரிடும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரித்துள்ளார்.
நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக டெல்டா வைரஸ் தொற்று மாற்றமடையுமாயின், முன்னர் ஏற்பட்டதை விட மிக மோசமான தொற்று நிலைமை உருவாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான அனர்த்த நிலைமைகளை தவிர்ப்பதற்கு அரசாங்கமும் மக்களும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண வலியுறுத்தியுள்ளார்.