வெளிநாட்டு மோகத்தை காட்டி லட்சக் கணக்கில் கொள்ளையடித்த இராணுவ மேஜர்
அமெரிக்காவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தனது மனைவியுடன் சேர்ந்து சுமார் 42 இலட்சம் ரூபாவை மக்களிடமிருந்து மோசடி செய்த இராணுவ மேஜர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்று (23) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வடக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாணந்துறை வடக்கு காவல்நிலையம், பாணந்துறை தெற்கு, தெஹிவளை, பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மவுண்ட் உட்பட பல காவல்நிலையங்களுக்கு கிடைத்த 6 முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
சந்தேகத்திற்குரிய மேஜர் யாழ்ப்பாணம் முகமாலை மிரிசுவல் பகுதியில் உள்ள முகாமில் பணியாற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் அதிகாரி என காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
பாணந்துறை கோரக்கன பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினரால் தெரிவித்தனர்.
இந்நிலையில், பல்வேறு நபர்களிடம் இருந்து மனைவி பெற்ற பணம் மேஜரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேஜரின் மனைவியும் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்தோடு, சந்தேக நபர் பாணந்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.