பல்கேரியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்
கிரிந்த கடற்கரையில் அண்மையில் மீட்கப்பட்ட சுமார் 345 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரித் சந்தகெலும் எனப்படும் ‘ரன் மல்லி’ பல்கேரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்டர்போல் விடுத்த சிவப்பு அறிவித்தல்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் தரவுத்தளங்களில் உள்ள தகவல்களின் அடிப்படையில், பல்கேரிய பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகநபரைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்டர்போல் கைது தொடர்பில் உறுதிப்படுத்தியுள்ளதாக காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
‘ரன் மல்லி’ அடையாளம்
சந்தேகநபரை நாடு கடத்தும் நடைமுறையின் கீழ் இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் வெளிவிவகார அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திக்குவெல்ல பகுதியைச் சேர்ந்த ‘ரன் மல்லி’, நீண்டகாலமாக துபாயில் வசித்து வந்ததாகவும், அங்கிருந்து இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை வழிநடத்தியதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தற்போது தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றொரு போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தகவின் வலையமைப்பில் முக்கிய நபராகவும் ‘ரன் மல்லி’ அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சர்வதேச சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கும் நோக்கில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஐரோப்பாவிற்குள் நுழைய முயன்றபோது, பல்கேரிய பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |