குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கை சாரதி கைது
குவைத்தில், தனது பணியமர்த்துநரின் குடும்ப உறுப்பினர்களை வாகனத்தில் ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை சாரதி ஒருவர், படிக மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஃபர்வானியா ஆளுநரக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, அல்-அர்தியா பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
கண்காணிப்பு காணொளிகளை ஆய்வு செய்த புலனாய்வாளர்கள், குடும்ப சாரதியாகப் பணியாற்றியபோது அவர் போதைப்பொருட்களை விநியோகித்ததாகக் கூறப்படும் நடவடிக்கைகளைக் கண்டறிந்துள்ளனர்.
குவைத் உள்துறை அமைச்சு
இதனையடுத்து, பொலிஸார் அவரை இடைமறித்து சோதனையிட்டபோது படிக மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் அடங்கிய பைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து, வீட்டின் உரிமையாளரின் ஒத்துழைப்புடன், அவர் தங்கியிருந்த அறையிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, 469.1 கிராம் படிக மெத்தம்பெட்டமைன், 0.7 கிராம் கஞ்சா, இலத்திரனியல் எடைமானி மற்றும் 285.950 குவைத் தினார் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் உள்ள நபர்களுக்கு மொத்தம் 6,573 குவைத் தினார் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதைக் காட்டும் நிதிப் பதிவுகளும் விசாரணையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
விநியோகிப்பதற்காகவே போதைப்பொருட்களைத் தன்னிடம் வைத்திருந்ததாகவும், குவைத்துக்கு வெளியே உள்ள ஒருவருடன் இணைந்து கடத்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்ததாகவும் சந்தேகநபர் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வீட்டு வாகனங்கள் மற்றும் குடியிருப்புகள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், வீட்டு வேலைக்காரர்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு பணியமர்த்துநர்களுக்கு குவைத் உள்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |