சிரேஷ்ட ஊடகவியலாளர் தொடர்பில் நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது பாதுகாப்பு சம்பந்தமாக சமுதித்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஆராய்ந்த கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
வீட்டின் மீது நடத்தப்படட தாக்குதல் தொடர்பான பீ. அறிக்கை ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர்.
சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றவர்கள் பயணித்த வீதியில் இரு பக்கங்களிலும் பொருத்தப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு கெமரா பதிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக ஆய்வுக்காக கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகளிலும் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்துள்ளன. வடக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களாக ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வந்துள்ளதுடன் ஊடகவியலாளர்களும் கொலை செய்யப்பட்டுள்ளனர். போர் நடைபெற்ற காலத்தில் தமிழ் ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
சிவராம், நிமலராஜன், நடேசன் உட்பட முக்கியமான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். அதேபோல் தெற்கில் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட போன்றோரும் காணாமல் ஆக்கப்பட்டனர்.
பலர் தாக்குதல்களுக்கு உள்ளாகினர். இதன் காரணமாக தென் பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர் கடந்த காலத்தில் வெளிநாடுகளில் தஞ்சமடைந்தனர்.
இப்படியான பின்னணியில் அண்மையில் தென்னிலங்கை ஊடகவியலாளரின் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கடந்த காலத்தை நோக்கி கவனத்தை திருப்பியுள்ளது என அவதானிகள் தெரிவித்துள்ளனனர்.
