காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கான இழப்பீட்டுத் தொகை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க சிறிலங்கா அமைச்சரவை தீர்மானித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவாளர் நாயகத்தினால் வழங்கப்படும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழுக்கமைய, காணாமல் ஆக்கப்பட்டோரின் நெருங்கிய உறவினர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா நிதிக்கொடுப்பனவு வழங்க கடந்த மார்ச் 14 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது.
அதற்கமைய, முன்னர் ஒரு இலட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது, இரண்டு இலட்சம் ரூபாயாக அதிகரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் யோசனை

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.