சர்வதேச விசாரணையை முடக்கும் ஓஎம்பி அலுவலகம் - பாரிய எதிர்ப்புப் போராட்டத்தில் உறவுகள்!
முல்லைத்தீவில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஓ எம் பி அலுவலக செயற்பாடுகளுக்கு எதிராகவே முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யுத்தம் நிறைவடைந்த நாள் முதல் தமது உறவுகளுக்கான நீதி கோரி போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 2017 மார்ச் எட்டாம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உறவுகளின் போராட்டம்
குறிப்பாக இலங்கையில் எமக்கு எந்த நீதியும் கிடைக்காது எனவும் இலங்கை அரசின் காணாமல் போனோர் அலுவலகம் இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் எவையும் எமக்கு பலனற்றவைகள் எனவும் சர்வதேச நீதிப்பொறிமுறையே தமக்கு தேவை என வடக்கு கிழக்கு எங்கும் ஆறு ஆண்டுகள் கடந்து ஏழாவது ஆண்டாக 150 க்கு மேற்பட்ட தாய், தந்தையரை இழந்தும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை அரசாங்கமும் காணாமல் போனோர் அலுவலகம் ஊடக இவர்களது சர்வதேச நீதி விசாரணை கோரிக்கையை முடக்கும் முகமாக பல நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தமது உறவுகளை அச்சுறுத்தி விபரங்களை பதிய முற்படுவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்நிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காணாமல் போனோர் அலுவலக விசாரணைகள் முன்னெடுக்கப்படவிருந்த நிலையிலேயே மக்கள் மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடத் தயாராகினர்.
புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்
அதனையடுத்து, இன்று விசாரணைகள் இடம்பெறாது என காணாமல் போனோர் அலுவலகம் அறிவித்திருந்த நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக திரண்டு காணாமல் போனோர் அலுவலக செயற்பாடுகள் தமக்கு தேவையில்லை என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
வழமைபோன்று உறவுகளின் போராட்டம் இடம்பெற்ற போது சிவில் உடையில் வந்த காவல்துறையினர் மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.











