ஐ.நா தீர்வு வழங்குமா? ஏக்கத்துடன் 5 ஆண்டுகள் வீதியில்- கதறும் தமிழர் தாயக உறவுகள்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யுத்தம் முடிந்து இன்று வரை தங்களுடைய உறவுகளை தேடி தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் 2009 மே மாதம் 18ஆம் திகதி யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் தங்களுடைய உறவுகளை கையளித்தவர்கள் யுத்த காலப் பகுதியின் போது காணாமல் போன உறவுகள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் என பலதரப்பட்ட வகைகளிலும் கடத்தப்பட்டும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளைத் தேடி தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.
இவ்வாறு போராட்டங்களை ஆரம்பித்து தமக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளமுடியாத நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கில் எட்டு மாவட்டங்களிலும் தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை ஆரம்பித்தனர்.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் 2017 மார்ச் மாதம் 8ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கொட்டகை அமைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வரை தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் மார்ச் 8ஆம் திகதி இன்று சர்வதேச மகளிர் தினத்தில் ஐந்து ஆண்டுகள் தொடர் போராட்டத்தை நிறைவு செய்து ஆறாவது ஆண்டாக இந்த போராட்டம் தொடர்கின்ற நிலையில் கூட இன்று வரை தங்களுக்கான எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்கவில்லை என்று தெரிவித்து, மார்ச் 8ஆம் திகதி மகளிர் தினத்தை புறக்கணித்து சர்வதேச நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
அந்தவகையில் இன்று காலை 10 மணிக்கு முல்லைத்தீவு இராஜப்பர் ஆலய முன்றலில் ஆரம்பித்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தில் நிறைவடைந்தது. பல நூற்றுக்கணக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அதன் போது நீ கொண்டுபோனவர்கள் எங்கே?, உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்?, இராணுவத்திடம் ஒப்படைத்த எம் பிள்ளைகளுக்கு மரண சான்றிதழ் தான் பதில் என்றால், கொலை செய்தவன் யார் ?, கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவே, பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றியே இறந்துகொண்டிருக்கின்றோம்.
மேலும் எங்கே எங்கே உறவுகள் எங்கே, எங்கே எங்கே இராணுவத்திடம் கையளித்த உறவுகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும், மகளிர் தினம் எமக்கு துக்கதினம், வேண்டாம் வேண்டாம் ஓ.ம்.பி வேண்டாம், வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடன் நீக்கு, நிறுத்து நிறுத்து இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து, குடும்பம் குடும்பமாக சரணடைந்தவர்கள் எங்கே, ஐக்கிய நாடுகள் சபையே நீதியை வழங்கு, எங்கே எங்கே எமது குழந்தைகள் எங்கே, நட்டஈடும் வேண்டாம் மரண சண்றிதழும் வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு இந்த போராட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.















