3.7 பில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் சிறிலங்கா கடற்படையினரால் மீட்பு...!
சிறிலங்கா கடற்பரப்பில் பல மில்லியன் பெறுமதியான பெருமளவிலான போதைப் பொருட்களை கடத்த முயன்ற 10 சந்தேக நபர்களுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள்,போதைப்பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் (13) காலி துறைமுகப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இந்த, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 179 கிலோ மற்றும் 906 கிராம் ஐஸ் போதைப் பொருட்களும், சுமார் 83 கிலோ 582 கிராம் அடங்கும் ஹெரோயின் போதைபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கை
இலங்கையின் கடற்பரப்பில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக, கடலோரக் காவல்படையினர் அடிக்கடி தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில்,
நேற்றைய தினம் (13) கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில், தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது, அதன்படி, தீவின் தெற்கு கடற்கரையிலிருந்து சுமார் 133 கடல் மைல் (246 கி.மீ) தொலைவில் இருந்த சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகு நிறுத்தப்பட்டிருந்தது.
குறித்த படகை சோதனை செய்த இடத்தில், அதில் சந்தேகத்திற்கிடமாக காணப்பட்ட 17 சாக்குகளில் ஐஸ் போதைப்பொருட்களும், ஹெரோயின் என்பன காணப்பட்டதை அடுத்து அதனை கடற்படையினர் கைப்பற்றியது மாத்திரமல்லாமல், போதைப்பொருட்களை கடத்த முயன்ற 06 சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடற்படையினரால் கைது
இதனைத் தவிர போதைப்பொருட்களை பரிமாறவென நிறுத்தப்பட்டிருந்த இன்னொரு மீன்பிடி படகுடன் 04 சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள் வெலிகம, இமதுவ மற்றும் காலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 வயது முதல் 54 வயது வரை மதிக்கத்தக்கவர்கள் என்றும், இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு சுமார் 3798 மில்லியன் ரூபாய் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சந்தேகநபர்கள் 10 பேருடன் போதைப் பொருள்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் இரண்டும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |