ஸ்ரீலங்காவில் ஒட்சிசன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடா? அடியோடு நிராகரித்தது அரசு
ஸ்ரீலங்கா வைத்தியசாலைகளில் இந்தியாவைப் போல ஒட்சிசன் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிலவிவருவதாக வெளியான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன நிராகரித்துள்ளார்.
தற்போது வைத்தியசாலைகளில் உள்ள ஒட்சிசன் சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
ஸ்ரீலங்காவின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் ஒட்சிசன் சிலிண்டர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள நோயாளர் கட்டில்களுக்கான பற்றாக்குறை நிலவிவருவதாக இன்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்தன.
குறிப்பாக முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஒட்சினைனை வழங்க போதுமான கொள்கலன்கள் கையிருப்பில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நோயாளிகளின் உயிர்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் முதித்த பெரேரா தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையின் கையிருப்பில் 80 கொள்கலன்கள் இருந்த போதிலும் தினமும் 150 ஒட்சிசன் கொள்கலன்கள் தேவைப்படுவதாக வைத்தியசாலை தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் 8 கட்டில்களில் நோயாளிகள் நிறைந்துள்ளதாகவும் அவர்களில் 6 பேருக்கு நேற்றைய தினம் ஒட்சிசன் வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வைத்தியசாலைக்கு தேவையான ஒட்சிசன் கொள்கலன்களை மே 15ஆம் திகதி வழங்குவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூச்சி விட சிரமப்படும் நோயாளிகளே தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு ஒட்சிசனை வழங்குவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் முதிதா பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, கேகாலை - மாவநெல்ல தள வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவரது சகோதரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டபோது போதுமான கட்டில் இல்லாமல் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியிருந்தது.
இந்த நிலையிலேயே, ஸ்ரீலங்கா வைத்தியசாலைகளில் ஒட்சிசன் சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்ற விமர்சனங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நிராகரித்துள்ளார்.