நாம் விடப்போவதில்லை- நாடாளுமன்றில் கோட்டாபய அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! (காணொளி)
சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சியினர், ஆளும்தரப்பு உறுப்பினர்களுக்கு எதிராக கருத்து வெளியிட்டு கோசங்கள் எழுப்பியுள்ளனர்.
அத்தோடு, அமைச்சர் பசில் ராஜபக்சவும், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்பராலும் நாட்டில் மீதியாக இருப்பதையும் இல்லாது செய்துவிடுவர் என்றும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து காவல்துறைமா அதிபர், நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை மீறியதாகக் கூறி, நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சியினர் கோசங்களை எழுப்பினர்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுலோகங்களை ஏந்தி, கோட்டாபயவுக்கும், அரசாங்கத்துக்கும், அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும் எதிராகக் கோசங்களை எழுப்பினர்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பெரும்பாலான நீதிமன்றங்கள், அதற்கு தடை விதிக்கவில்லை. எனினும் காவல்துறைமா அதிபர், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் காவல்துறையைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை தடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதன் போது குற்றம் சுமத்தினார்.
மேலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தை காவல்துறையைக் கொண்டு தடுக்கமுடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், அரசாங்கத்தில் இருந்து இன்று 40 உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் வெளியேறத் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசாங்கத்தை காப்பாற்ற எவரும் இல்லை என்றும் அவர் தொிவித்துள்ளார். மேலும் 5 வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை ஆட்சி செய்ய விடப்போவதில்லை என்றும் ரஞ்சித் மத்தும பண்டார இதன் போது எச்சரித்துள்ளார்.