40 ஆண்டுகளின் பின்னர் புனரமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற கட்டடம்! வெளியான தகவல்
சிறிலங்கா நாடாளுமன்ற (Sri Lanka Parliament) கட்டடத்தை புனரமைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடம் சேதமடைந்துள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இதனடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சேதமடைந்த கட்டடம்
நாடாளுமன்ற கட்டடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளதாகவும், குறித்த கட்டடம் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அண்மை நாட்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், 40 ஆண்டு கால பழமையான கட்டடம் சேதமடைவது ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல என ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எனினும், தற்போது நாடாளுமன்ற கட்டடத்தை புனரைப்பது தொடர்பில் அரசாங்கமும் நாடாளுமன்றமும் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புனரமைக்கும் நடவடிக்கை
இந்த விடயம் தொடர்பில் கடந்த 25 ஆம் திகதி சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலையீட்டுடன் நாடாளுமன்ற கட்டடத்தை புனரமைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரவு செலவு திட்டத்தின் ஊடாக இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இந்த கூட்டத்தின் போது அறிவுறுத்தப்பட்டதாகவும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |