சிறிலங்காவை விட்டு வெளியேறிய இலட்சக்கணக்கானோர்..!
இந்த வருடத்தில் இதுவரை இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் பதிவுசெய்யாதவர்கள்
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்துரைக்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " வெளிநாடு சென்றவர்களில் சிலர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யாதவர்கள்.
இதேவேளை, மூன்று லட்சத்து முப்பது ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ளனர்", எனக் குறிப்பிட்டார்.
இலட்சக்கணக்கில் கடவுச்சீட்டு விநியோகம்
அத்துடன், இந்த வருடத்தின் முதல் 08 மாதங்களில் 700,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகள், 2016 ஆம் ஆண்டு முழுவதும் வழங்கப்பட்ட 658,725 கடவுச்சீட்டுகளின் சாதனையை முறியடித்து, பயண ஆவணங்களின் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இடம்பிடித்துள்ளன.
