ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் ஏற்பட்ட நிலை
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டமை மூலம், ஒட்டுமொத்த இலங்கை மக்களும் தோல்வி கண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, எரிபொருள் விலையேற்றத்தை அங்கீகரித்துள்ள அரசாங்கத்தினால் எந்த வகையிலும் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கப்போவதில்லை என கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் விலையேற்ற தீர்மானமானது மிகவும் அநீதியாகும். அந்தத் தீர்மானத்தை மேற்கொண்ட எரிசக்தி அமைச்சருக்கு எதிராகவே நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தோம்.
அது எமது கட்சியின் தீர்மானம் மட்டுமல்லாமல் இலங்கை மக்களினதும் ஏகோபித்தக் குரலாகவே அமைந்தது.
எனினும் மக்களுக்கு ஏற்பட்ட அநீதியை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து அனுமதித்ததினால் மக்கள் இன்று மேலும் அதிருப்தியடைந்துள்ளனர்.
எரிபொருள் விலையேற்றத்தை அரசாங்கம் இன்று அனுமதித்துள்ளது. அதனூடாக மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன? உதய கம்மன்பில எரிபொருள் விலையை அதிகரித்தமை அவரது தனிப்பட்ட முடிவாகும் என்றும் பதவி விலக வேண்டுமெனவும் தெரிவித்த மொட்டுக்கட்சியினர் சிறந்த நாடகமொன்றையே அரங்கேற்றியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினரது இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததால் நாங்கள் தோல்விகண்டதாக அமையாது. ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே தோல்வியடைந்துவிட்டனர் என்றே கொள்ளவேண்டும் என்றார்.