மக்களின் போராட்டங்களை திசை திருப்ப திட்டம்
அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெறும் மக்கள் போராட்டங்களை நசுக்குவது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இதனால் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள அவசரகாலச் சட்டத்தை மீளப்பெறுமாறு கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் தீர்மானத்திற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பலரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
மக்களின் குரலை நசுக்கி, ஆட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்த அவர், அதனைக் கைவிட்டு மக்களின் குரலுக்கு செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச விலகப் போவதாக வெளியான தகவல் மக்களின் போராட்டங்களை திசை திருப்பும் ஒரு நடவடிக்கையென ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இலங்கை மக்கள் அனைவரும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரும் நிலையில், பிரதமரை பதவி விலக சொல்வதற்கு பதிலாக தாம் முதலில் பதவி விலக வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன் பின்னர் பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.

