மீண்டும் ராஜபக்சக்களின் ஆட்சியை எதிர்பார்க்கும் மக்கள் - சாகர பகிரங்கம்!
ராஜபக்சக்களின் ஆட்சியை இன்றும் இலங்கையிலுள்ள பெரும்பான்மையான மக்கள் எதிர்பார்த்திருப்பதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கும் ராஜபக்சக்கள் பதவி விலகியிருக்க கூடாது என்பதே பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு 69 லட்சம் பேர் வாக்களித்திருந்தனர். அவரை பதவியிலிருந்து நீக்கும் உரிமையும் அதிகாரமும் அந்த மக்களுக்கு மாத்திரமே உள்ளது.
மக்கள் ஆதரவுடனேயே ராஜபக்சக்கள் ஆட்சி பீடம் ஏறினர்
அதுமட்டுமன்றி மூன்றிலிரண்டு பெரும்பான்மையான மக்கள் ஆதரவுடன் சிறிலங்கா பிரதமராக தெரிவு செய்யப்பட்ட மகிந்த ராஜபக்ச பதவி விலகியது தவறு.
ஆகவே இலங்கை வாழ் மக்களின் ஆதரவுடனேயே ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்துள்ளனர். எவரும் பலவந்தமாக வரவில்லை.
அரசியல் எண்ணம் கோட்டாபயவுக்கு இல்லை
தற்போது சிறிலங்கா முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய நிலையில் அவருடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டாலும் அரசியல் தொடர்பாக எதுவும் கலந்துரையாடப்படவில்லை. அவருக்கு அவ்வாறானதொரு எண்ணமும் இல்லை”. எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.