குறிவைக்கப்படும் தனித்து வாழும் முதியோர்கள்...! விடுக்கப்படுள்ள கடும் எச்சரிக்கை
நாட்டில் தனியாகவும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளிலும் வாழும் முதியோர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்துப் பொதுமக்கள் அதிக அவதானம் செலுத்த வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.
முதியவர்களின் பிள்ளைகள் தொழில்வாய்ப்பு நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பது அல்லது நாட்டின் ஏனைய பகுதிகளில் குடியேறியுள்ளதால் முதியவர்கள் தனிமையில் வாழும் நிலை அதிகரித்துள்ளது.
வன்முறைத் தாக்குதல்கள்
இதனடிப்படையில் இவ்வாறான வீடுகளை இலக்கு வைத்துப் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் உள்ளிட்ட குற்றவாளிகள் நகை, பணம் மற்றும் ஏனைய சொத்துக்களைக் கொள்ளையடிக்க முற்படுகின்றனர்.
அண்மைக்கால விசாரணைகளின்படி இவ்வாறான சம்பவங்கள் வன்முறைத் தாக்குதல்களாகவும் கொலைகளாகவும் மாறியுள்ளன.
இதனடிப்படையில் முதியவர்கள் வாழும் வீடுகளில் இரவு வேளையில் போதிய வெளிச்சத்தை உறுதிப்படுத்துமாறும் அறிமுகமில்லாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதைத் தவிர்க்குமாறும் அண்டை வீட்டாரோடு தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பராமரிப்பாளர்களின் பின்னணி
மேலும் முதியவர்கள் தனியாக வசிப்பது குறித்துக் கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூகக் காவல் குழுக்களுக்கு (Community Policing Committees) அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் அவசரத் தொடர்பு எண்களை வீட்டில் தெளிவாகக் காட்சிப்படுத்துவதுடன் அவர்களுக்கு இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய கைத்தொலைபேசிகளை வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முதியவர்களைப் பராமரிப்பதற்காக உள்வாங்கப்படும் வீட்டுப் பணியாளர்கள் அல்லது பராமரிப்பாளர்களின் பின்னணியை உன்னிப்பாகப் பரிசீலிக்குமாறும் அவர்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னர் காவல்துறை சான்றிதழ்களை (Police Clearance Reports) பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே முதியவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொதுமக்கள் முன்கூட்டியே தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறை மேலும் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |