நீதிமன்றத்தின் கைது உத்தரவை அவமதிப்பவர்களுக்கு இலங்கை காவல்துறையின் விசேட அறிவிப்பு
கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் அதனைத் தவிர்த்து தலைமறைவாக இருப்பவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என இலங்கை காவல்துறையினர் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர்.
1979ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 60ஆம் பிரிவின் கீழ், கைது உத்தரவைத் தவிர்த்து தலைமறைவாக இருக்கும் ஒருவரை குறிப்பிட்ட இடத்திலும் நேரத்திலும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு எழுத்துமூல அறிவிப்பொன்றை நீதிமன்றம் வெளியிட முடியும்.
குறித்த அறிவிப்பின் மூலம் சம்பந்தப்பட்ட நபருக்கு நீதிமன்றில் முன்னிலையாவதற்கு குறைந்தபட்சம் 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அசையும் மற்றும் அசையா சொத்து
அவ்வாறு அறிவிக்கப்பட்ட பின்னரும் குறித்த நபர் நீதிமன்றில் முன்னிலையாக தவறினால், சட்டத்தின் 61ஆம் பிரிவின் கீழ் அந்த நபருக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்குவதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |