காணி விடுவிப்பில் அரசும் இராணுவமும் பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றன: சிறிதரன் சாடல்
தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்கும் விவகாரத்தில் அரசாங்கமும் இராணுவமும் மாறி மாறிப் பொறுப்பைத் தட்டிக்கழித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களுக்காக வீதிகளில் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், அந்த மக்களின் காணிகளில் இராணுவத்தினர் சலூன், கடைகள் மற்றும் தோட்டங்களை அமைத்து வியாபாரம் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (20) நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ச்சியான போராட்டம்
காணி ஆக்கிரமிப்பு மற்றும் மக்களின் அவலம் இது தொடர்பில் அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், "கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மக்கள் வரலாற்றில் இல்லாதவாறு தேசிய கட்சியொன்றிற்கு 3 ஆசனங்களை வழங்கி, தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என நம்பினார்கள்.

ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பலாலி, வசாவிளான் மற்றும் மயிலிட்டி ஆகிய பகுதிகளில் ஒரு துண்டு நிலம் கூட விடுவிக்கப்படவில்லை. பலாலியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், மயிலிட்டியில் வெள்ளிக்கிழமைகளிலும் மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரித் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
காணிகளை விடுவிப்பது தொடர்பில் கேட்டால், 'நாங்கள் விடத் தயார், அரசாங்கம்தான் தயாரில்லை' என இராணுவத் தரப்பிலும், 'இராணுவம் விடுகிறதில்லை' என அரசாங்கத் தரப்பிலும் மாறி மாறிப் பதிலளிக்கப்படுகிறது.
தமிழ் மக்களின் காணிகளில் உள்ள தென்னை மரங்களிலிருந்து தேங்காய்களைப் பிடுங்கி அந்த மக்களுக்கே இராணுவத்தினர் விற்பனை செய்கின்றனர்.
இறுதி யுத்தம்
மேலும், மக்களின் நிலங்களில் இராணுவம் சலூன் மற்றும் கடைகளை நடத்துவதுடன், தோட்டங்களைச் செய்து பொருட்களை வெளியில் விற்று வருமானம் ஈட்டுகிறது. இதனைப் பூர்வீக நில உரிமையாளர்கள் வீதிகளில் நின்று கண்ணீரோடும் வலியோடும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை குறித்துச் சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்.பி, "இறுதி யுத்தம் முடிவடையும் தருவாயில் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளாரோடு பல போராளிகள் சரணடைந்தார்கள்.
ஈரோஸ் இயக்கத்தின் தலைவரும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினருமான பாலகுமாரன் மற்றும் அவரது மகன் சூரியத்தேவன் ஆகியோரை இராணுவத்தினர் பிடித்து நிலத்தில் இருத்திச் சுற்றிவர நின்ற புகைப்படத்தை பி.பி.சி (BBC) ஊடகவியலாளர் பிரான்சிஸ் ஹரிசன் வெளியிட்டிருந்தார்.
அந்தப் புகைப்படம் இலங்கையின் பிரதான பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது. ஆனால், அவ்வாறு சரணடைந்தவர்கள் இன்றுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்" எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிராக வாக்களிப்பு
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கோ அல்லது அடிப்படைத் தேவைகளுக்கோ இந்த வரவு-செலவுத் திட்டத்தில் எவ்வித தீர்வும் முன்வைக்கப்படாததால், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |