வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு! காவல்துறையின் அதிரடி நடவடிக்கை
நாடு தழுவிய ரீதியில் ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட வாகனங்களை கண்டறிந்து அகற்றுவதற்கான விசேட நடவடிக்கை ஒன்றை காவவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
வீதி விபத்துக்களைக் குறைப்பதையும், குறைபாடுகள் உள்ள வாகனங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சோதனை நடவடிக்கைகள், தற்போது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கை
இந்த விசேட சோதனைகளின் போது வீதிப் பயன்பாட்டிற்கு தகுதியற்றவை என கண்டறியப்படும் வாகனங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படும் என்பதுடன், அவற்றுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

மோட்டார் வாகனப் பரிசோதகர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையில், குறிப்பாக அங்கீகரிக்கப்படாத வகையில் உயர்த்தப்பட்ட பம்பர்கள், மாற்றியமைக்கப்பட்ட பக்கவாட்டுக் கண்ணாடிகள் மற்றும் ஏனைய ஓட்டுநர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் போன்ற மாற்றங்களைச் செய்துள்ள வாகனங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
உரிமையாளர்களுக்கு அபராதம்
அத்துடன், அதிகளவில் கரும்புகையை வெளியிடும் வாகனங்கள் மற்றும் முறையாக பராமரிக்கப்படாத பாழடைந்த வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சம்பந்தப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அவை வீதிகளில் பயணிக்க தடை விதிக்கப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |