தேர்தல் காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பதவிகளுக்கு விண்ணப்பம் கோருவது சட்டவிரோதமானது - சஜித் சாடல்
இன்று அரசியலமைப்பு பேரவை கூடியதாகவும்,தேர்தல் நடைபெறும் வேளையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பம் கோருவது அரசியல் விரோத செயல் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட வேட்பாளர்களுடன் இணைந்து சர்வ மதத் தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் இன்று (30) கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவர்களது வீடுகளுக்கு காவல்துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இத்தகைய சூழ்நிலையில், அரசியலமைப்பு பேரவை, தேர்தல் ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான விண்ணப்பங்களை கோருவது அரசியலமைப்பை மீறும் செயலாகும் எனவும்,மார்ச் 9 ஆந் திகதிக்குப் பிறகு இதை கோருமாறு தான் கேட்டுக்கொண்டதாகவும், இதன் மூலம் தேர்தலை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு மேலும் மேலும் அரசியல் சதித்திட்டங்களில் ஈடுபட்டு தேர்தலை சீர்குலைக்க இது வாய்ப்பாக அமையும் எனவும் எனவும் சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் தாக்குதல்
நாட்டின் அரசியலமைப்புப் பேரவை மக்களின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கேயன்றி மீறுவதற்கல்ல எனவும், இந்நேரத்தில் எவ்வகையிலும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பங்களைக் கோருவது அரசியலமைப்பை மீறும் செயலாகும் எனவும், அரசியலமைப்பு பேரவையின் இரகசியம் பேணப்படும் என வாக்குறுதியளித்த போதிலும், மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் அரசியலமைப்பு பேரவையின் சட்டவிரோத நடவடிக்கைகளை அங்கீகரிக்க முடியாது என்பதால்,அந்த தீர்மானங்கள் குறித்து மக்களுக்கு வெளிப்படுத்துவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிர்வாக செயற்பாடுகளில் தவறு செய்பவர்களுக்கு சிவில் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்க நீதித்துறை ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும்,ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சிவில் வழக்கின் தீர்ப்பு இதற்கு சிறந்த உதாரணமாகும் என்பதனால், அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் இவ்வாறான சட்ட விரோத செயல்களைச் செய்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

