கதிரைகளுக்காக அடிபிடிபடும் சிங்கள தேசம்! கேள்விக்குறியாகும் மக்களின் நிலை
சிங்கள தேசம் தங்களின் கதிரைகளுக்காக அடிபிடிபடுகின்றதே தவிர அப்பாவி மக்கள் நலன் தொடர்பாக பொறுப்புனர்சியற்ற நிலையில் செயற்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் நாட்டில் அதிகரிக்கும் வற் மூலம் மக்கள் கொதித்து எழும்பி போராடுவார்கள் மீண்டும் ஒரு பிரச்சினை உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் நேற்று (05) மாலை தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களது போராட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிங்கள தேசம் தமிழ் மக்களது போராட்டம் ஒரு பயங்கரவாத போராட்டம் என இந்த உலகத்துக்கு தெரிவித்துவந்த காலப்பகுதியிலே தமிழ் மக்களுடைய ஆயுத போராட்டம் ஒரு நியாயமான போராட்டம் சிங்கள மக்கள் போன்று சம உரிமையோடு நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காக தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கின்ற நியாயப்பாட்டை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தியமையால் அவர் சிங்கள தேசத்தினால் 2000 ஆம் ஆண்டு சந்திரிக்காவின் ஆட்சிகாலத்திலே சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
மாமனிதர் குமர் பொன்னம்பலம் தாயக தேசத்திற்கு மிகப் பெரும் சொத்தாக இருந்தவர் வடகிழக்கில் இளைஞர் யுவதிகள் சிங்கள பௌத்த தேசியவாதத்தினால் மிக மோசமாக தாக்கப்பட்டு கைது செய்து சிறைகளிலே அடைக்கப்பட்டு மிக மோசமாக கொடூரமாக படுகொலை செய்யப்பட்துடன் சிலர் எவ்விதமான ஆதாரங்களும் இன்றி பல ஆண்டுகளாக சிறையில் அடைத்தனர்.
நிம்மதியான அரசியல் தீர்வு
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல இளைஞர்களை இலவசமாக நீதிமன்றில் வாதாடி அவர்களை மீடடெடுத்தார்.
அவர் சுயநலமற்ற துணித்தல் மிக்க நேர்மையான தமிழனாக இருந்த காரணத்தாலே அவர் படுகொலை செய்யப்பட்டார் இன்று அவருடைய மகன் கஜேந்திரகுமார் அதே நேர்மையுடன் தமிழ் தேசிய உணர்வுடனும் தமிழ் மக்களுக்கு ஒரு நிம்மதியான அரசியல் தீர்வு வேண்டும் என்பதற்காக அவருடைய தகப்பன் வழியிலே இன்று தமிழர்களுடைய தேசத்திலே ஒரு உறுதியான தலைமைத்துவமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
இந்த நாடு வறுமை நிலைக்கு சென்று கொண்டிருக்கும் மக்கள் அந்த நிலையினை தாக்குப்பிடிக்க முடியாது குறிப்பிட்ட வருமானத்துக்குள் வாழ்க்கையை கொண்டு நடாத்த வேண்டிய சூழ்நிலையில் புதிதாக 18 வீதமாக வற் வரி விதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு கோட்டபாய அரசை மக்கள் துரத்தியடித்தார்களே அவ்வாறு மக்கள் இந்த வற் வரி விதிப்புக்கு எதிராக இதனால் மக்கள் கொதித்து எழுந்து போராடுவார்கள் என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |