சம்பந்தனுடன் சுமந்திரனை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு!
தமிழ் தேசிய பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதியளித்திருந்தாலும், அது தொடர்பில் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துரைத்துள்ளது.
இந்த குழுவினருக்கும் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது, இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டதாக கட்சியின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து ஆராய்தல், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான தொடர்பை விரிவுபடுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் அறுவர் அடங்கிய நாடாளுமன்றக் குழுவினர் நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்தனர்.
தமிழ் தேசியம் சம்மந்தப்பட்ட பிரச்சினை
இந்த குழுவினர் நேற்றைய தினம், மனித உரிமைகள் சார்ந்து இயங்கி வரும் குடிசார் சமூகப் பிரதிநிதிகள், பொருளாதாரம் மற்றும் சூழலியல் விவகாரங்கள் சார்ந்து இயங்கி வரும் குடிசார் சமூகப் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடாத்தியிருந்தனர்.
இதனை தொடர்ந்து, இன்றை தினம் ஐரோப்பிய ஒன்றியப் நாடாளுமன்றக் குழுவினருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது இலங்கையில் மேற்கொண்டு வரும் திருத்தங்கள் தொடர்பில் எம்மிடம் கலந்தாலோசித்ததாகவும் தமிழ் தேசியம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் அவர்களிடம் தெரியப்படுத்தியதாகவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.