தேர்தல்கள் ஒத்திவைக்கப்படக்கூடிய சாத்தியம்: கஞ்சன விஜேசேகர எச்சரிக்கை
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக தேர்தல்கள் ஒத்திவைக்கப்படலாமென சிறிலங்கா மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekera) எச்சரித்துள்ளார்.
தேர்தல் ஒத்திவைக்கப்படுவது குறித்து நாடாளுமன்றில் பலர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தாலும், சிறிலங்கா(Sri Lanka) அரசாங்கத்துக்கு தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் இல்லையென கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற வேண்டிய காலத்தில் நடைபெற வேண்டும். இந்த தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து தீர்மானங்களையும் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. வரவு செலவு திட்டத்தில் தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தல்
இந்த ஆண்டில் அதிபர் தேர்தல் நடைபெறுமென சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) அறிவித்துள்ளார். 5 ஆண்டுகளே அதிபர் ஒருவரின் சேவைக்காலம் எனவும் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையில் காணப்படும் பிரச்சனைகளிலிருந்து அனைவரையும் திசைதிருப்பும் வகையில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது குறித்து சிலர் கருத்து வெளியிடுகிறார்கள். கடந்த காலங்களில் தேர்தலை ஒத்திவைக்க ஆதரவளித்த தரப்பினரே தற்போது தேர்தலை ஒத்திவைப்பது குறித்து பேசுகிறார்கள்.
தேர்தலை ஒத்திவைப்பது குறித்து இதுவரை அமைச்சரவையில் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவும் தேர்தலை நடத்த தயார் என கூறியுள்ளது.
தேர்தல்கள் ஒத்திவைப்பு
எந்தவொரு பிரச்சனையும் இல்லையென சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் கூறும் நிலையில், எதற்காக தேர்தல் ஒத்திவைக்கப்படுவது குறித்து பேச வேண்டும். தேர்தலை ஒத்திவைக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிடவில்லை.
எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட சிலர் தொழிற்சங்கங்களை கொண்டு குறித்து நடவடிக்கையை முன்னெடுக்கிறார்கள். தபால், தொடருந்து, கிராமசேவகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளே தேர்தலை ஒத்திவைக்க வழிவகுக்கும் என்பதை நான் கூற விரும்புகிறேன்.
இவ்வாறாக தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரினதும் பின்னணியில், அரசியல் தரப்பினர் இருக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |