புதிய அரசியலமைப்பு தொடர்பில் கோட்டாபய வழங்கிய வாக்குறுதியை சுதந்திர தினத்திற்குள் வெளியிட வேண்டும்!
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதாக அரச தலைவர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய குறுகிய பிரதி ஒன்றையாவது பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்திற்கு முன்னர் நாட்டுக்கு வெளியிட வேண்டும் என நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய (Karu Jayasuriya) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தற்போது கேலிக்குரியதாக மாறி விட்டது என நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய (Karu Jayasuriya) தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்நோக்கிய பயணத்திற்கு ஜனநாயகமான அதியுயர் அரசியலமைப்புச் சட்டம் ஒன்று அவசியம். அரசாங்கத்தை அமைத்து ஒரு வருடத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வருவதாக அரச தலைவர் வழங்கிய வாக்குறுதியை மேலும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போது அதில் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் மக்களின் தலையீடு இன்றி உருவாக்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை அரசாங்கம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 20வது அரசியலமைப்புச் சட்டத்தை முன்வைத்த நாளில் இருந்து அதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்ட சேதம், ஜனநாயகம் முற்றாக அழிந்த விதத்தை நாங்கள் நாட்டுக்கு சுட்டிக்காட்டியுள்ளோம்.
20வது திருத்தச் சட்டம், மூன்றில் இரண்டு பெரும்பான்மை, இவற்றினால், நாட்டுக்கு நன்மை ஏற்பட்டதா இல்லை. இறுதியில் கேலியாக மாறியுள்ளது. முன்னாள் அரச தலைவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, 19வது திருத்தச் சட்டத்தின் நன்மைகளை சுட்டிக்காட்டி இருந்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் கூட்டணி கட்சியின் அங்கத்தவர் ஒருவர் மூலம் இப்படியான கருத்துக்கள் வெளியிடப்பட்டமை, அந்த ஜனநாயகத்தை பாதுகாக்க பலமாக அமைந்துள்ளதுடன் அதனை நாங்கள் வரவேற்கின்றோம் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.