வடக்கு விவசாயம் நவீனமயமாகும் - நெல்லுக்கு இம்முறை 100 ரூபா உத்தரவாத விலை - கிளிநொச்சியில் ரணில்!
வட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் கிளிநொச்சி, பரந்தன் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பரந்தன் வயல்வெளிக்கு விஜயம் செய்த அதிபர், அங்குள்ள விவசாயிகளிடம் நெற்செய்கை தொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து, அதற்குரிய தீர்வினை பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.
விவசாயிகளுக்கு தேவையான உரங்களை அரசாங்கம் துரிதமாக வழங்கியிருந்ததுடன், இம்முறை பெரும் போகத்தில் கூடுதலான நெல் அறுவடை கிடைக்கும் என நம்புவதாக அதிபர் ரணில் தெரிவித்துள்ளார்.
நூறு ரூபா விலை
அதேசமயம், ஒரு கிலோ நெல்லை அரசாங்கத்தின் ஊடாக நூறு ரூபா படி உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அதிபர் ரணில் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதேசமயம், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இருபது இலட்சம் குடும்பங்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10 கிலோ கிராம் அரிசியை இலவசமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
விவசாயத்தை நவீன மயமாக்கும் திட்டத்தின் மூலம் அறுவடையை அதிகரிக்க எண்ணுவதாகவும் அதிபர் ரணில் வடக்கு மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தையும் வட மாகாணத்தையும் மீண்டும் நாட்டிற்கு உணவளிக்கும் இடமாக மாற்றுவதற்கு விவசாயத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில்
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மற்றும் வடமாகாண அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.