நாடளாவிய ரீதியில் விஸ்தரித்துள்ள கூட்டமைப்பின் போராட்டம்- கையெழுத்திட்ட பேராயர்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில், அனைத்து இனத்தவரும் அங்கம் வகிக்கும் சிவில் மற்றும் அரசியல் அமைப்புகளின் உதவியுடன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தும் மனுவில் கையெழுத்து பெறும் திட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
கொழும்பு மாவட்டத்தில் பொது மக்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கைகள் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் இன்று நடபெற்றது. அதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணயக்கியன் இராசமணிக்கம், கொழும்பு பேராயரை சந்தித்து மனுவில் கையெழுத்துப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தி மக்களிடம் கையெழுத்து பெறும் மனுவில் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கையெழுத்திட்டுள்ளார்.
அரசாங்கம் தற்போது கொண்டு வரவுள்ள பயங்கரவாத தடுப்பு தொடர்பான புதிய திருத்தச் சட்டம் மூலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு உட்பட சர்வதேச அமைப்புகளின் கோரிக்கை மற்றும் அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய உருவாக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் எனக் கோரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
